வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருக்கோவிலூர் அருகே வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே உள்ள செங்கனாங்கொல்லை கிராமத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் சமுகத்தை சார்ந்த சுமார் 166 பேர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டது. இதில் முதல் கட்டமாக 117 பேருக்கு நேற்று கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட 117 பேருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. மேலும் அவர்களை அழைத்து செல்ல 2 பஸ்களும் செங்கனாக்கொல்லை கிராமத்திற்கு வந்தது. இந்த நிலையில் பல்வேறு காரணங்களுக்காக தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க முடியவில்லை. வேறு ஒரு நாளில் பட்டா வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா கிடைக்கவில்லை என கூறி குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து அவர்கள் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு அங்குள்ள திருக்கோவிலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் கற்களை போட்டு மறியலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, உளுந்தூர்பேட்டை ஆதிதிராவிடர் நல தாசில்தார் மணிமேகலை ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகள் பட்டியலை சரிபார்க்க வேண்டும், அதில் முறைகேடு நடந்துள்ளது என்பன உள்பட பல்வேறு காரணங்களை கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளர் வழக்கு தொடர்ந்து தற்போது விட்டுமனைப்பட்டா வழங்க தடை உத்தரவு பெற்றுள்ளார். இந்த வழக்கு வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. விசாரணை முடிந்த பின்னர் இந்த மாத இறுதிக்குள் பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டா வழஙு்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்தனர்.