சதுரகிரி மலையில் தங்கி வழிபட அனுமதிகோரி மக்கள் போராட்டம்
நவராத்திரி விழாவையொட்டி சதுரகிரி மலையில் தங்கி வழிபட அனுமதி கோரி மக்கள் போராட்டம் நடத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
7 ஊர் மக்கள்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள சுந்தரபாண்டியம், அகத்தாப்பட்டி, வத்திராயிருப்பு போன்ற பகுதிகளில் இருந்து 7 ஊரைச் சேர்ந்த நெசவாளர் பகுதி மக்கள் வருடம் தோறும் நவராத்திரி விழாவில் சதுரகிரி மலையில் தங்கியிருந்து வழிபாடு செய்வார்கள்.
கடந்த 2 ஆண்டுகளாக இந்த வழிபாடு நடைபெறவில்லை. இந்த ஆண்டு மலையில் தங்கி இருந்து வழிபட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், அதிகாரிகள் சதுரகிரி மலையில் தங்கி சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்தனர்.
போராட்டம்
இதைத்தொடர்ந்து இந்து முன்னணி தலைவர் யுவராஜ் தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் வனத்துறை அலுவலகம் முன்பு அமர்ந்து நேற்று ேபாராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே மக்கள் தங்களது வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.
===============