பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்


பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 Dec 2022 12:15 AM IST (Updated: 15 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை அருகே பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே பஸ்கள் நின்று செல்லாததை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நின்று செல்லாத பஸ்கள்

சுல்தான்பேட்ைட அருகே சின்னபுத்தூர் கிராமம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக வெளியிடங்களுக்கு செல்ல பஸ் போக்குவரத்தையே நம்பியுள்ளனர். ஆனால் அந்த கிராமத்தில் உள்ள நிறுத்தத்தில் பஸ்கள் சரிவர நிற்காமல் செல்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

சாலை மறியல்

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 70-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.55 மணியளவில் அங்குள்ள பல்லடம்-உடுமலை சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பரபரப்பு நிலவியது.

இதை அறிந்ததும், உடுமலை அரசு பணிமனை கிளை மேலாளர் நடராஜன், சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சுல்தான்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தை

அப்போது இனிவரும் காலங்களில் பல்லடம்-உடுமலை சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும், சின்னபுத்தூர் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதை ஏற்று சுமார் 1½ மணி நேரத்துக்கு பிறகு சாலை மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். அதன்பின்னரே அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.


Related Tags :
Next Story