மக்கள் நீதிமன்றம் மூலம் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
மக்கள் நீதிமன்றம்
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் நடந்தது. ராமநாதபுரம் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை தாங்கினார். நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதிபதி கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி கதிரவன் வரவேற்றார். இதில், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வக்கீல் சங்க பொருளாளர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட நீதிபதி விஜயா பேசியதாவது:- நுகர்வோர் கோர்ட்டு வழக்குகளை சமரசம் மூலம் தீர்வு காண்பதற்காக இந்த மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நுகர்வோர் கோர்ட்டு வழக்குகளும் இனி மக்கள் நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்படும். அதனை விசாரித்து சமரச தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். சேவை குறைபாடு தொடர்பான வழக்குகள்தான் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். அந்த வழக்கினையும் கோர்ட்டுகளுக்கு கொண்டுவந்து நீண்ட நாட்கள் விசாரிக்காமல் இதுபோன்ற மக்கள் நீதிமன்றங்களில் விசாரித்து முடித்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தீர்வு தொகை
பொதுவாக சேவை குறைபாடு தொடர்பான வழக்குகள் யாரும் நுகர்வோர் கோர்ட்டுகளில் நஷ்டஈடு பணத்திற்காக போடுவதில்லை. தங்களுக்கான சேவை குறைபாடு ஏற்பட்டதால் மனம் உடைந்து விரக்தியில்தான் வழக்கு தொடர்கின்றனர். எனவே நுகர்வோர் கோர்ட்டுகளில் உள்ள வழக்குகளை இருதரப்பினரும் அமர்ந்து பேசினால் தீர்த்து கொள்ளலாம். தற்போது நுகர்வோர் கோர்ட்டில் 48 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு பேசினார். மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியே 78 ஆயிரம் நிவாரண தொகையாக அறிவிக்கப்பட்டது.