மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்
திருவள்ளூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்களிடமிருந்து 352 கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதில் நிலம் சம்பந்தமாக 114 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 62 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 11 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 67 மனுக்களும், இதர துறைகள் சம்பந்தமாக 98 மனுக்களும் அடங்கும்.
மேலும் மாவட்ட அளவில் 2019-ம் ஆண்டில் அதிக கொடி நாள் நிதி வசூல் செய்த 3 அலுவலர்களுக்கு தலைமை செயலாளர் சான்றிதழ்கள் மற்றும் வெள்ளி பதக்கங்களையும், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பாக தனது மகனை ராணுவ பணியில் நிரந்தர படை அலுவலராக சேர்த்துள்ள ஒரு முன்னாள் படைவீரருக்கு தொகுப்பு மானிய உதவி தொகையாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கி பாராட்டினார்.
அதைத்தொடர்ந்து மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குனர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.