ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி: சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியிருக்கும் ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டு என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருக்கும் ஐகோர்ட்டின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காந்தி ஜெயந்தியன்று மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி அளித்திருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

அமைதிப்பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத்தவறான முன்னுதாரணமாகும்.

மக்கள் நலனென்பது துளியுமற்று, மதவாத அரசியலையும், பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையில் எடுத்து, நாட்டைத் துண்டாடி அதன்மூலம் அரசியல் லாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பது என்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் பேராபத்தாகும்.

ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கும் சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story