மாற்றுத்திறனாளிகளை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளிகளை போட்டித் தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
x

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டும்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2013-ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண்-177-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென்று நானும் எனது அறிக்கைகள் வாயிலாக தி.மு.க. அரசை பலமுறை கேட்டுக் கொண்டேன். ஆனால், இதனை நிறைவேற்ற முன்வரவில்லை. மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு போட்டித் தேர்வு என்ற முடிவினை தி.மு.க. எடுத்துள்ளது.

இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டுமென்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக Vபோராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடியபோது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பார்வை மாற்றுத் திறனாளிகள் கைது செய்யப்பட்டு, பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடைசியாக பூந்தமல்லி அருகே வேலூர் செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் இறக்கிவிடப்பட்டதாகவும், மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.

தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

தி.மு.க.,வின் வாக்குறுதிப்படி, தகுதித் தேர்வு முடித்த அனைவருக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக போட்டித் தேர்வில் தி.மு.க. அரசு மும்முரம் காட்டி வருகிறது. ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் முடிவடையவுள்ள நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்குக்கூட போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க மறுப்பது தி.மு.க. அரசின் ஈவுஇரக்கமற்ற தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

அறநெறி மீறி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியமனங்கள் வழங்க வேண்டுமென்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story