திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.28 கோடி மோசடி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு


திருச்செங்கோட்டில்  நிதி நிறுவனம் நடத்தி ரூ.28 கோடி மோசடி  பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு
x

திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.28 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

நாமக்கல்

திருச்செங்கோட்டில் நிதி நிறுவனம் நடத்தி சுமார் ரூ.28 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட நபர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

ரூ.28 கோடி முதலீடு

திருச்செங்கோடு தாலுகா தேவனாங்குறிச்சி கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திரண்டு வந்து புகார் மனு ஒன்றை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் ஒரு தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள் ரூ.100-க்கு 1 ரூபாய் 25 காசுகள் வீதம் வட்டி தருவதாக கூறி பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளை பெற்றனர். அவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி, 250-க்கும் மேற்பட்டோர் சுமார் ரூ.28 கோடியை முதலீடு செய்தோம். இதற்கு ஆதாரமாக நிதி நிறுவனத்தின் பெயரில் புரோநோட் மற்றும் காசோலைகளை கொடுத்தனர்.

இந்த நிலையில் நிதி நிறுவனத்தை நடத்தி வந்த நபர், பொதுமக்களிடம் இருந்து பெற்ற முதலீட்டு பணத்தில் பல கோடி ரூபாய்க்கு நிலம் மற்றும் சொத்துக்களை தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெயரில் வாங்கி, பாதுகாப்பு செய்து விட்டு கடந்த 2020-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சட்டப்படியான நடவடிக்கை

இதையறிந்த நாங்கள் அவரது மனைவி, மகளிடம் பணத்தை கேட்டோம். அதற்கு அவர்கள் உங்கள் பணத்தை எங்களின் சொத்துக்களை விற்பனை செய்தாவது கொடுத்து விடுகிறோம் என்று உறுதி கூறினார்கள். நாங்களும் அதை ஏற்றுக்கொண்டு நம்பி இருந்தோம். ஆனால் அவர்கள் இதுநாள் வரையிலும் எங்களில் யாருக்கும் பணம் தராமல் காலம் கடத்தி கொண்டு உள்ளனர்.

மீறி யாராவது பணம் என்று வந்தீர்கள் என்றால் உங்களை அடியாட்களை வைத்து கொலை செய்து விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். தற்போது அந்த நிதி நிறுவனம் பதிவு செய்யப்படாமல் மோசடியாக ஏமாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு வந்த விவரமும் எங்களுக்கு தெரியவந்துள்ளது. எனவே தாங்கள் இதில் தலையிட்டு எங்களை ஏமாற்றிய நபர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து, அவர்களின் பெயரில் உள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

இதேபோல் அவர்கள் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.


Next Story