விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு - ஐகோர்டில் தள்ளுபடி


விடுதலை செய்யக்கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு - ஐகோர்டில் தள்ளுபடி
x

விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு நளினி, ரவிச்சந்திரன் தரப்பிற்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.

இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து, கவர்னரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் நளினி வழக்கு தொடர்ந்தார். அதேபோல, ரவிச்சந்திரனும் விடுதலை செய்ய கோரி வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், மனுதாரர் தரப்பில் வக்கீல் எம்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 6-ந்தேதி உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிக்க உள்ளதாக ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்தது. அதன்படி இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை நாடுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போல், ஐகோர்ட்டில் நளினியையும், ரவிச்சந்திரனையும் விடுதலை செய்து உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Next Story