கோவையில் பரபரப்பு: பாஜக அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு..!


கோவையில் பரபரப்பு: பாஜக அலுவலகம் உள்பட 2 இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு..!
x

கோவையில் பா.ஜ.க. அலுவலகம் உள்பட 2 இடங்களில் அடுத்தடுத்து பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை:

கோவை சித்தாபுதூரில் பா.ஜனதா கட்சி அலுவலகம் உள்ளது. இங்கு உள்ள அலுவலகத்தின் மீது நேற்று இரவு 8.35 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென பா.ஜ.க. அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். அதற்குள் அந்த ஆசாமிகள் அங்கிருந்து தப்பித்து சென்றனர். இதற்கு இடையே இந்த சம்பவம குறித்து தகவல் அறிந்ததும் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் பா.ஜ.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காட்டூர் சரக உதவி கமிஷனர் வின்சென்ட் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா உள்ளிட்ட போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அங்கு வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அந்த பாட்டிலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கண்காணிப்பு கேமராவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் பெட்ரோல் நிரப்பிய திரியுடன் கூடிய பீர் பாட்டிலை பா.ஜ.க. அலுவலகத்தின் எதிரே வி.கே.கே. மேனன் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு பெட்ரோல் குண்டை வீசி விட்டு செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. ஆனால் அந்த ஆசாமிகளின் முகம் சரியாக பதிவாகவில்லை. மேலும் அந்த பெட்ரோல் வெடிகுண்டு தீ எதுவும் பிடிக்காததால் அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. இந்த சம்பவம் குறித்து காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே அதே நேரத்தில் கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள லட்சுமணன் என்பவரது துணிக்கடையில் இதேபோல் பீர் பாட்டிலில் மண்ணெண்ணெய் நிரப்பிய வெடிகுண்டு வீசப்பட்டது. அதில் அங்கு துணிகள் வைத்திருந்த அட்டைப்பெட்டியில் மண்ணெண்ணெய் வெடிகுண்டு பட்டு கீழே விழுந்தது. ஆனால் தீ பற்றவில்லை. இந்த சம்பவம் குறித்து வெரைட்டி ஹால் ரோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் பஸ் நிலையம் எதிரே பா.ஜ.க.வினர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பாஜக அலுவலகம் மீது வெடிகுண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை எடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story