சபரிமலை மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு எருமேலியில் பேட்டை துள்ளல்


சபரிமலை மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு எருமேலியில் பேட்டை துள்ளல்
x

பேட்டை துள்ளல் நிகழ்ச்சி 2 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

திருவனந்தபுரம்,

மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்தனர்.

சபரிமலையில் அய்யப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின், அய்யப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து மண்டலபூஜை நடந்தது. அதனை தொடர்ந்து நடை அடைக்கப்பட்ட நிலையில், கடந்த டிசம்பர் 30-ந்தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டது.

சபரிமலையில் வரும் ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில், இன்றைய தினம் எருமேலியில் பேட்டைத்துள்ளல் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்த நிலையில், இந்த ஆண்டு பேட்டைத்துள்ளல் நிகழ்ச்சியானது வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு அய்யப்ப பக்தரும் மாலையணிந்து சபரிமலைக்கு வரும் போது, எருமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்குச் சென்று, எருமேலியில் உள்ள தர்ம சாஸ்தாவை வணங்கி பேட்டைத்துள்ளல் ஆடுவது ஐதீகமாக உள்ளது.

இன்று நடைபெறும் பேட்டைத்துள்ளலின் போது யானை ஊர்வலத்துடன் வரும் அம்பலக்குலா மற்றும் ஆலங்காடு குழுவினரை வாவர் பள்ளிவாசலைச் சேர்ந்த ஜமாத் பெரியவர்கள் வரவேற்று பள்ளிவாசலில் இருந்து எருமேலியில் உள்ள தர்மசாஸ்தா கோவில் வரை அழைத்துச் செல்கிறார்கள்.

அதன் பிறகு கானகப் பாதையான பெரும் பாதை வழியாக நடந்து சபரிமலைக்குச் செல்கிறார்கள். இந்த குழுவினருடன் பள்ளிவாசலில் இருந்து வாவர், தனது நண்பனான அய்யப்பனைக் காண சபரிமலைக்குச் செல்வதாக ஐதீகம் உள்ளது. இன்றைய தினம் சபரிமலையில் பேட்டைத்துள்ளல் நிகழ்ச்சி பக்தர்களின் கோஷத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.



1 More update

Next Story