நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருக்கார்த்திகை திருவிழாவையொட்டி நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பரணி தீபம்
திருக்கார்த்திகை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு முந்தைய நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகாஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தீப திருவிழா
இன்று (செவ்வாய்க்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வருகிறார்கள். அங்கு மகா ருத்ரதீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.