திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி


திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி
x

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்பட கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சென்னை

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் 75 ரெயில் நிலையங்களில் 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூறும் சிறப்பு நிகழ்ச்சிகள் ரெயில்வே துறை சார்பில் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் தெற்கு ரெயில்வேயில் மகாகவி பாரதியாரை நினைவு கூறும் சென்னை திருவல்லிக்கேணி ரெயில் நிலையம், பழசிராஜாவை நினைவு கூறும் நீலாம்பூர் ரெயில் நிலையம், வாஞ்சிநாதனை நினைவு கூறும் வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையம், திருப்பூர் குமரனை நினைவு கூறும் திருப்பூர் ரெயில் நிலையம், சிப்பாய் புரட்சியை நினைவு கூறும் வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையம் என 5 ரெயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் திருவல்லிக்கேணி ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, மகாகவி பாரதியாரின் வரலாற்றை கூறும் புகைப்பட கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். மேலும் அவருடைய கவிதைகள், தேசப்பற்று பாடல்களுடன் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

'செல்பி பாயிண்ட்' என்கிற பெயரில் பயணிகள் நின்று புகைப்படும் எடுத்துக்கொள்ளும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாரதியார் பாடல்கள், காணொளி காட்சிகள், கலைநிகழ்ச்சிகள் என இந்த வாரம் முழுவதும் திருவல்லிக்கேணி ரெயில்நிலையத்தில் மாலை 4 மணி முதல் 5 மணி வரை (1 மணி நேரத்துக்கு) நடைபெறும். இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 23-ந்தேதி வரை நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் உள்பட ரெயில்வே உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story