போலீஸ் நிலையம் எதிரே மறியல்; ஊராட்சி தலைவர் உள்பட 12 பேர் கைது
போலீஸ் நிலையம் எதிரே மறியலில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பழூர்:
நீண்ட நேரம் காத்திருப்பு
அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், ஸ்ரீபுரந்தான் ஊராட்சி மன்ற தலைவர் உலகநாதன். இவர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். நேற்று தா.பழூர் பகுதிக்கு பணிகள் காரணமாக வந்திருந்த உலகநாதன், மதியம் பணிகள் முடித்து சொந்த ஊருக்கு திரும்புவதற்காக பஸ் நிறுத்தத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தார்.அப்போது மதியம் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்ரீபுரந்தான் கிராமத்திற்கு செல்லும் டவுன் பஸ் வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவருடன், ஸ்ரீபுரந்தான் கிராமத்திற்கு செல்வதற்கு கிராம மக்கள் சிலரும் காத்திருந்ததாக தெரிகிறது. நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ் வராததால் அவர்கள் ஆத்திரமடைந்தனர்.
மறியல்
இதையடுத்து சரியான நேரத்திற்கு பஸ் இயக்கப்படாததை கண்டித்து பஸ்சுக்காக காத்திருந்தவர்களுடன் ஊராட்சி தலைவர் உலகநாதன் சேர்ந்து, திடீரென அருகில் உள்ள டீக்கடைகளில் இருந்து நாற்காலி மற்றும் பெஞ்ச் ஆகியவற்றை சாலையின் குறுக்கே போட்டு, அதில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் நிலையத்திற்கு எதிரே அவர்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சாலையில் இருபுறங்களில் வந்த வாகனங்கள் அணிவகுத்து நிற்கத்தொடங்கின. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதையடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர்.
12 பேர் கைது
ஆனால் பஸ் வராமல் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து உலகநாதன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து, அணைக்குடம் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.