பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்த காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இந்தநிலையில் மலைப்பகுதிகளில் திடீரென பெய்த கனமழை காரணமாக வத்திராயிருப்பு அருகே உள்ள பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர் வர தொடங்கியது. ஒரே இரவில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது.47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 23 அடியாக இருந்த நிலையில் தற்போது 5 அடி உயர்ந்து 28 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து 145 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.இதேபோல் கோவிலாறு அணையின் நீர் இருப்பு 7 அடி இருக்கிறது. பிளவக்கல் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த அணையை நம்பியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் பிளவக்கல் அணையை நம்பி எண்ணற்ற விவசாயிகள் வாழ்ந்து வருகிறோம். இந்தநிலையில் இந்த அணையின் நீர்மட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு குறைந்து காணப்பட்டது. இதனால் விவசாயிகள் பயிர்களை எப்படி காப்பாற்ற போகிறோம் என்ற கவலையில் இருந்தோம். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு பெய்த கனமழையினால் ஒரேநாளில் 5 அடி உயர்ந்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.