'பிரதமர் மோடி யாரையும் பிளவுபடுத்தவில்லை, அனைவரையும் இணைக்கிறார்' - தமிழிசை சவுந்தரராஜன்
பிரதமர் மோடி மதரீதியாக யாரையும் பிளவுபடுத்தவில்லை என்றும், அனைவரையும் இணைக்கத்தான் பார்க்கிறார் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரதமர் மோடி அனைத்து திட்டங்களையும் இஸ்லாமிய மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் சேர்த்துதான் கொடுக்கிறார் என தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது;-
"பிரதமர் மோடி மதரீதியாக யாரையும் பிளவுபடுத்தவில்லை. அவர் அனைவரையும் இணைக்கத்தான் செய்கிறார். இஸ்லாமிய பெண்களுக்கு முத்தலாக்கில் இருந்து விடுதலை கிடைத்துள்ளது. ஹஜ் பயணத்திற்கு பெண்களை அனுப்புவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவர் செய்துள்ளார்.
அனைத்து திட்டங்களையும் இஸ்லாமிய மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் சேர்த்துதான் கொடுக்கிறார். சிறுபான்மையினரை பிரித்து வைப்பது காங்கிரஸ்தான். அவ்வாறு பிரித்தால்தான் அவர்களால் வாக்குகளைப் பெற முடியும். சிறுபான்மை மக்களும், பெரும்பான்மை மக்களும் இணைந்துவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு வேலையே கிடையாது. இதை சிறுபான்மை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.