தமிழக அரசின் கடன் ரூ.14.50 லட்சம் கோடி- பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தகவல்


தமிழக அரசின் கடன் ரூ.14.50 லட்சம் கோடி- பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தகவல்
x

இந்த நிதியாண்டின் முடிவில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.52 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும் என பா.ம.க. நிழல் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பா.ம.க. சார்பில் 22-வது ஆண்டாக நிழல் நிதிநிலை அறிக்கையை ( நிழல் பட்ஜெட்) சென்னையில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டு உள்ள சில முக்கிய அம்சம்கள் வருமாறு:-

2024-25-ம் நிதியாண்டில் தமிழக அரசின் மொத்தக்கடன் ரூ.14.50 லட்சம் கோடியாக இருக்கும். இந்த நிதியாண்டின் முடிவில் ஒவ்வொரு குடும்பத்தின் பெயரிலும் ரூ.7.52 லட்சம் கடன் வாங்கப்பட்டிருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.

தமிழ்நாடு அரசின் வரி அல்லாத வருவாய் கடந்த ஆண்டில் ரூ.18,940 கோடி ஆகும். இதை 2 லட்சத்து 180 கோடியாக உயர்த்த சிறப்பு திட்டம் உருவாக்கப்படும்.

கிரானைட், தாதுமணல் விற்பனை மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், மணல் இறக்குமதி, செயற்கை மணல் விற்பனை ஆகியவற்றின் மூலம் ரூ.40 ஆயிரம் கோடியும் ஈட்டப்படும்.

கியாஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும். ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாகவும், முதியோர், ஆதரவற்றோர் உதவித்தொகை ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.

குழந்தைகளுக்கு தனித்தமிழில் பெயர்சூட்டும் பெற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும். தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்கள் அடுத்த 3 ஆண்டுகளில் நிரப்பப்படும். நடப்பாண்டில் 2 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.

மேற்கண்ட திட்டங்கள் உள்பட 463 யோசனைகள் 120 தலைப்புகளில் நிழல் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளன.


Next Story