மேலாளர் பதவி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
மேலாளர் பதவி தருவதாக கூறி என்ஜினீயரிடம் ரூ.5 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை
பள்ளிபாளையத்தை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரிடம் மேலாளர் பதவி தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.5 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ஜினீயர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கோசிக் ராம் (வயது 25). சாப்டுவேர் என்ஜினீயர். இவர் சமூக வலைதளம் மூலம் ஆன்லைனில் வேலை தேடி வந்தார். இதையடுத்து ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு தனியார் நிறுவனம் ஒன்று செயல்படுவதாகவும், அதில் மேலாளர் பதவி தருவதாகவும் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் தருவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.
அதற்கு முன்பணமாக ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும், லேப்டாப் மற்றும் பல்வேறு மின்சாதன பொருட்கள் அனுப்பி வைப்போம் என்றும் ஆன்லைனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை உண்மை என்று நம்பி சம்பந்தப்பட்ட கம்பெனியின் வங்கி கணக்கிற்கு ரூ.5 லட்சத்தை கோசிக்ராம் அனுப்பி உள்ளார்.
ரூ.5 லட்சம் மோசடி
பின்னர் அந்த கம்பெனி போலியானது என்பதும், ஆன்லைனில் ரூ.5 லட்சம் ஏமாற்றப்பட்டு இருப்பதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வியிடம் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோசிக் ராமிடம் ஆன்லைன் மூலம் ரூ.5 லட்சத்தை மோசடி செய்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.