3-வது நாளாக போலீசார் விசாரணை


3-வது நாளாக போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 20 Sep 2022 7:00 PM GMT (Updated: 20 Sep 2022 7:00 PM GMT)

டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 3-வது நாளாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:-

டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட வழக்கில் 3-வது நாளாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுனிவர் காயின் என்ற பெயரில் டிஜிட்டல் காயின் நிறுவனம் நடத்தியவர்கள், குறைந்த பணம் முதலீடு செய்தால் நிறைய லாபம் கொடுக்கும் எனக்கூறியும், பிளாட், வெளிநாட்டு சுற்றுலா, ஐபோன் என கவர்ச்சி திட்டங்களை கூறியும், 1,000-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடிசெய்தனர்.

இதையடுத்து கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தின், 8 இடங்களில் கடந்த, 18-ந் தேதி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி யுனிவர் காயின் பங்குதாரர்களான பர்கூர் அடுத்த பெருகோபனப்பள்ளி கிட்டனூர் பிரகாஷ், செட்டிப்பள்ளி சீனிவாசன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மாறிமாறி புகார்

இந்த நிலையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசிடம் கரூர், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிலர் புகார் அளித்துள்ளனர். அதில், பணத்தை கட்டுகட்டாக அடுக்கி தங்களை ஏமாற்றியதாகவும், தங்கள் பணத்தில் உல்லாச சுற்றுலா சென்றதாகவும் யுனிவர் காயின் நிறுவனம் நடத்திய ஆறு பேர் மீதும் புகார் அளித்துள்ளனர்.

மேலும் அவர்களுக்குள், ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்து நாடகமாடுவதாகவும், இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக 3-வது நாளாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள்.


Next Story