போலீஸ் மியூசியம் 2-ம் ஆண்டு நிறைவு விழா; சிறப்பு தபால் அட்டை - உறை வெளியீடு


போலீஸ் மியூசியம் 2-ம் ஆண்டு நிறைவு விழா; சிறப்பு தபால் அட்டை - உறை வெளியீடு
x

சென்னையில் உள்ள போலீஸ் மியூசியத்தின் 2-ம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு தபால் அட்டை- உறை வெளியிடப்பட்டது. அதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு டி.ஜி.பி. சங்கர்ஜிவால் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

சென்னை

சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு போலீஸ் மியூசியமாக பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. கடந்த 28-9-2021 அன்று இந்த பிரமாண்ட போலீஸ் மியூசியத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த போலீஸ் மியூசியத்தை தினமும் ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் பேர் நேரில் பார்த்து ரசித்துள்ளனர். இந்த பிரமாண்ட போலீஸ் மியூசியம் தற்போது 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதையொட்டி நேற்று மாலை மியூசிய வளாகத்தில் கோலாகல விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு தபால் அட்டை-உறை வெளியிடப்பட்டது. தமிழ்நாடு தலைமை தபால் துறை அதிகாரி சாருகேசி தபால் அட்டை-உறையை வெளியிட, டி.ஜி.பி. சங்கர்ஜிவால் அவற்றை பெற்றுக்கொண்டார். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் டி.ஜி.பி. சங்கர்ஜிவால் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இந்த விழாவில் போலீஸ் பேண்டு வாத்திய குழுவினரின் இன்னிசை மற்றும் போலீஸ் மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சியும், போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நாடகமும் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு போலீஸ் வீட்டு வசதி வாரிய தலைவர் டி.ஜி.பி. ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணய தலைவர் டி.ஜி.பி. சீமாஅகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், சென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் கபில்குமார் சி சரத்கர், மகேஸ்வரி, இணை கமிஷனர் கயல்விழி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், போலீஸ் குடும்பத்தினர் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


Next Story