செங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?


செங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
x

கொல்லிமலையில் உள்ள செங்கரை போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என மலைவாழ் மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

நாமக்கல்

சேந்தமங்கலம்

கொல்லிமலை

நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக கொல்லிமலை விளங்கி வருகிறது. இங்கு சுமார் 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். கொல்லிமலை மைய பகுதியில் உள்ள செம்மேட்டில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது.

மலைப்பகுதியில் உள்ள 14 ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களும் குற்ற வழக்குகளை தீர்த்துக் கொள்ள செம்மேட்டில் உள்ள வாழவந்தி நாடு போலீஸ் நிலையம் மட்டுமே இருந்து வந்தது. மலைப்பகுதியில் தொலைதூரத்தில் உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 30 கி.மீட்டர் அதிகமான தொலைவுக்கு கடந்து வாழவந்தி நாடு போலீஸ் நிலையத்திற்கு மலைவாழ் மக்கள் வந்து சென்றதால், அந்த சிரமத்தை போக்கிடும் விதமாக கொல்லிமலை எடப்புளி நாடு ஊராட்சியில் உள்ள செங்கரை கிராமத்தில் புதிதாக போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.

கடந்த 27.2.2016-ந் தேதி அந்த போலீஸ் நிலையத்தை அப்போதைய தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா காணொலி காட்சியின் மூலம் திறந்து வைத்தார். தொடர்ந்து தற்காலிகமாக செங்கரை பஸ் நிலையத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் அந்த போலீஸ் நிலையம் இயங்கி வருகிறது. இட நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அந்த போலீஸ் நிலையத்திற்காக புதிதாக கட்டிடம் கட்டுவது எப்போது என்று மலைவாழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர்.

புதிய போலீஸ் நிலையம்

இது குறித்து மலைவாழ் மக்கள் பாதுகாப்பு சங்க தலைவர் குப்புசாமி கூறியதாவது:-

கொல்லிமலையை தாலுகாவாக அறிவித்து சுமார் 7 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால் தாலுகா பகுதிக்கான சிறப்பு அம்சங்கள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது. அதில் ஒன்றுதான் செங்கரை போலீஸ் நிலையத்திற்கான புதிய கட்டிடம் கட்டுவது ஆகும்.

செங்கரை பஸ் நிலையத்திற்குள் தற்காலிகமாக இயங்கி வரும் அந்த போலீஸ் நிலையத்தில் இட பற்றாக்குறை உள்ளது. சுமார் 30 போலீசார் அங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இட நெருக்கடியில் இருந்து வருகின்றனர். விசாரணை கைதியை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றால் மற்றொரு போலீஸ் நிலையமான வாழவந்தி நாட்டிற்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. இதனால் போலீசாருக்கு பணிச்சுமை மேலும் அதிகமாகின்றது. எனவே மலைவாழ் மக்கள் நலன் கருதி விரைவாக செங்கரை பகுதியிலேயே போலீஸ் நிலையம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆம்புலன்ஸ் வசதி

அரியூர் நாட்டை சேர்ந்த நாகலிங்கம்:-

கொல்லிமலை தாலுகா அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆம்புலன்ஸ் வசதி இல்லை. எனவே இங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். தற்போது இயங்கி வரும் போலீஸ் நிலையத்திற்கு 1 கிலோ மீட்டர் தொலைவில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் போலீசார் குடியிருப்பு கட்டுவதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே அங்கு விரைவாக போலீசார் குடியிருப்பு பகுதியை கட்டுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

இதேபோல் புதிதாக போலீஸ் நிலையம் கட்ட சுமார் 25 சென்ட் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் விரைவாக போலீஸ் நிலையம் கட்டுவதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story