வாகனம் மோதி பெண் சாவு:மகேந்திரமங்கலம் போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் கூலிகானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 50). விவசாயி. இவருடைய மனைவி மல்லம்மாள் (45). இந்த நிலையில் கணவன், மனைவி மோட்டார் சைக்கிளில் சென்றனர். அப்போது பெரியதப்பை பிரிவு நெடுஞ்சாலையில் ராயக்கோட்டையில் இருந்து வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த மல்லம்மாள் சம்பவ இடத்திலேயே இறந்தார். முனிராஜ் பலத்த காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மகேந்திரமங்கலம் போலீசார் மல்லம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் 3 நாட்கள் கடந்த நிலையில் விபத்தை ஏற்படுத்தியது அரசு பஸ் தான் என்றும், எனவே பஸ்சை பறிமுதல் செய்ய வேண்டும் என உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு. சிந்து அங்கு சென்று உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் விபத்து ஏற்படுத்திய வாகனம் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.