போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்குறிச்சியில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்
கள்ளக்குறிச்சி
2-ம் நிலை காவலர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள மேல்விழி காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ்(வயது 33). 2-ம் நிலை காவலரான இவர் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஷீலா பவுலின்மேரி. இவர்களுக்கு யாஸ்வின்(6) என்ற மகளும், நிசான்(1½) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
அந்தோணிராஜ் கள்ளக்குறிச்சியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் அந்தோணிராஜ் நேற்று காலை வழக்கம்போல் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு பணிக்கு சென்றார். பின்னர் மதியம் அங்கிருந்து கள்ளக்குறிச்சிக்கு வந்த அவர் வீ்ட்டுக்கு சென்று கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுக்கொண்டு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது வெளியே சென்றிருந்த அவரது மனைவி திரும்பி வந்து கதவை திறக்க முயன்றபோது உள்பக்கமாக பூட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மின்விசிறியில் பிணமாக தொங்கிக்கொண்டிருந்த அந்தோணிராஜ் உடலை பார்த்து அவர் கதறி அழுதார்.
கணவன், மனைவி தகராறு
இது பற்றிய தகவல் அறிந்து வந்த கள்ளக்குறிச்சி போலீசார் அந்தோணிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நேற்று காலை அந்தோணிராஜிக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அவர் தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா? அல்லது குடும்ப தகராறு காரணமா? என விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.