விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை


விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை
x

மேச்சேரி அருகே விஷம் குடித்து போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது.

சேலம்

மேச்சேரி

போலீஸ்காரர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்த சின்ராஜ்-அமுதா தம்பதியின் மகன் அன்புராஜ் (வயது 21). இவர் சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் 2-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு சொந்த ஊரான ஊஞ்சக்காடுக்கு வந்தார். எனினும் சென்னையில் இருந்து வந்த நாள் முதல் அவர் சோகமாக காணப்பட்டு வந்தாராம்.

தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் அன்புராஜ் வீட்டில் இருந்தபோது வாந்தி எடுத்தார். இதுகுறித்து தாயார் அமுதா கேட்டபோது தான் விஷம் குடித்து விட்டதாக கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அமுதா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓமலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக் கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதுபற்றிய தகவல் அறிந்து விைரந்து வந்த மேச்சேரி போலீசார் அன்புராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

இந்த சம்பவம் தொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புராஜின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அன்புராஜ் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மனஉளைச்சல் ஏதேனும் இருந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் அன்புராஜ் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதன் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

அன்புராஜ் தற்கொலை செய்து கொண்டது குறித்து சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல் படை பிரிவு உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீஸ்காரர் அன்புராஜ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவருடன் பணியாற்றிய சக போலீசார் மற்றும் நண்பர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story