எறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி: அரியலூர் அருகே பரபரப்பு


எறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி: அரியலூர் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 5 Feb 2024 2:20 AM GMT (Updated: 5 Feb 2024 2:57 AM GMT)

எறும்பு மருந்து தின்ற போலீஸ் ஏட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள பிளாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 34). இவர் தா.பழூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வேம்பு (32). இவர்களுக்கு ரக்ஷனா (10), திலீபன் ராஜ் (5), அகிலேஸ்வரன் (1) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலை 9 மணியளவில் வீட்டில் இருந்த பாண்டியன் எறும்பு மருந்து தின்று விட்டதாக உறவினர்களிடம் தெரிவித்து விட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அவரது மனைவி வேம்பு கூறுகையில், பாண்டியன் கடந்த 4 நாட்களாக வீட்டிற்கு வராமல் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்ததாகவும், பணிச்சுமை காரணமாக அவரால் சரியாக குடும்ப பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு இது போன்ற முடிவுக்கு வந்து இருக்கலாம் என்று தெரிவித்தார். இதையடுத்து, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தா.பழூர் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். பின்னர் அங்கு பணிபுரியும் அனைத்து போலீசாரையும் அழைத்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ஏட்டு பாண்டியனுக்கு துறை சார்ந்த எந்த நெருக்கடியும் கொடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் அவரது குடும்பம் சார்ந்து அவருக்கு ஏதேனும் மன உளைச்சல் இருந்ததா? அல்லது வேறு யாராவது அவருக்கு மனரீதியாக நெருக்கடியை கொடுத்தார்களா? என்பது தெரியவில்லை. பாண்டியன் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கண்விழித்த பிறகுதான் அவரிடம் முறையாக விசாரிக்க முடியும் என்றார்.

எறும்பு மருந்து தின்று போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story