பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து


பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து
x

வருகிற 22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

சென்னை,

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 4 நாட்கள் இடைவெளிவிட்டு வருகிற 22-ந்தேதி வரை பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், இன்று பிளஸ்-2 தேர்வெழுதும் மாணவ- மாணவிகளுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தலைவர்களின் வாழ்த்துச்செய்தி பின்வருமாறு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

"இன்று பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு, உங்கள் பள்ளிக் கல்வியின் இத்தனை ஆண்டுகள் கடின உழைப்புக்கு நற்பலன்கள் கொடுக்கவிருக்கும் தேர்வு. நீங்கள் ஒவ்வொருவருமே தனித்திறன் படைத்தவர்கள். அனைவருக்கும் சிறந்ததொரு எதிர்காலம் உருவாக்குவதாக, இந்தத் தேர்வுகள் அமையட்டும்.

மாணவச் செல்வங்கள், இந்தத் தேர்வுகளின் மூலம், உயர்கல்வியில் தங்களுக்கு விருப்பமான துறைகளைத் தேர்ந்தெடுத்து, பல சாதனைகள் படைக்க எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

"இன்று (01-03-2024) முதல் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறவும், தாங்கள் விரும்பும் உயர் கல்வியை பயிலவும் எனது நல்வாழ்த்துகள்."

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

"இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் எனதன்பு மாணவ - மாணவியர் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையாமல், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலுமே பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும்.

எனவே எனது உயிருக்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள். தேர்வில் வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்."


Next Story