ஒண்டிவீரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை


ஒண்டிவீரன் நினைவிடத்தில் அரசியல் கட்சியினர் மரியாதை
x

ஒண்டிவீரன் நினைவு தினத்தையொட்டி நெற்கட்டும்செவலில் உள்ள நினைவிடத்தில் நேற்று அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நெற்கட்டும்செவல் பச்சேரி கிராமத்தில் உள்ள ஒண்டிவீரன் நினைவிடத்தில், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

ஒண்டிவீரனின் வாரிசான ஆறுமுகம் மற்றும் பச்சேரி கிராமத்து பொதுமக்கள் சார்பில் காலை 7 மணி அளவில் ஒண்டிவீரனின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன், முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்பையா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மூர்த்திபாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான அ.மனோகரன், வாசுதேவநல்லூர் நகர செயலாளர் சீமான் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பா.ஜனதா சார்பில் மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட தலைவர் கே.ராஜேஷ் ராஜா, பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட முன்னாள் தலைவர் ராமராஜா, வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய தலைவரும், சுப்பிரமணியபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான வக்கீல் ராம்குமார் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் மாநில பொறுப்பாளர்கள் சித்தார்த்தன், முத்துக்குமார், தமிழ்வேந்தன், தென்காசி மாவட்ட செயலாளர் சேகர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். நெற்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வாசுதேவநல்லூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொறுப்பாளர் மருதையா தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வாசுதேவநல்லூர் ஒன்றிய பொறுப்பாளர் சுரேஷ் தலைமையிலும், ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நிறுவனர் நாகராஜன் தலைமையிலும் மரியாதை செலுத்தப்பட்டது.

திராவிட தமிழர் கட்சி சார்பில் தென்மண்டல துணைத்தலைவர் ஆதிவீரன், தென்காசி மாவட்ட செயலாளர் கரு வீரபாண்டியன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் தலைமையில் மாவட்டம் முழுவதும் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story