ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென் மாவட்டங்களுக்கு ரெயில் இயக்க வலியுறுத்தி கோவையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை
தென் மாவட்டங்களுக்கு ரெயில் இயக்க வலியுறுத்தி கோவையில் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
கோவையில் இருந்து ராமேசுவரம், திருச்செந்தூர், தென்காசி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ரெயில் இயக்கக்கோரி அரசியல் கட்சிகள் சார்பில் நேற்று ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பி.ஆர்.நடராஜன் எம்.பி. தலைமை தாங்கினார். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய ரெயில்வே துறையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில் ம.தி.மு.க, காங்கிரஸ், எஸ்.டி.பி.ஐ., திராவிடர் கழகம், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வணிகர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மே-17 இயக்கம் உள்பட 33 அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் திரளான கலந்து கொண்டனர்.
ெமமு ரெயில்
இதுகுறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. மற்றும் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தொழில் நகரமான கோவையில் வெளி மாவட்டங்களை சோ்ந்த ஏராளமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக தென் மாவட்டங்களை சோ்ந்த மக்கள் அதிகம் வசிக்கின்றனா். காசில்லாமல் பயணிக்க காசிக்கு மத்திய அரசு ரெயில் விடுகிறது. ஆனால் காசு கொடுத்து பயணிக்க ராமேசுவரம், திருச்செந்தூர், தென்காசி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட நகரங்களுக்கு ரெயில் விட மத்திய அரசு மறுக்கிறது. பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ரெயில் நிலையங்களை சேலம் கோட்டத்துடன் இணைகக வேண்டும். மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வழியாக பொள்ளாச்சிக்கு மெமு ரெயில் இயக்க வேண்டும்.
அடுத்த கட்ட போராட்டம்
இது தவிர சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரெயில் நிலையங்களில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நிறைவேறாவிட்டால் கோவை மற்றும் தென் மாவட்ட மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஜாகீர், இந்திய கம்யூனிஸ்டு சக்திவேல், ம.தி.மு.க. சேதுபதி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முஜிபுர் ரஹ்மான், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில பொறுப்பாளர் ஆர்.எம்.ரபி, கோவை மாவட்ட வணிகர் சங்க பேரவை சார்பில் தலைவர் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.