ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி


ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி
x

ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கியது போல ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று கே.எஸ். அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னை,

அரசியல் அமைப்பை பாதுகாப்போம் மற்றும் கையோடு கைகோர்ப்போம் எனும் பரப்புரையை முன்னெடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது.

இதில், ஜனவரி 26-ம் தேதியன்று அரசியல் சட்டத்தை பாதுகாப்போம்-கையோடு கைகோர்ப்போம் என்ற பரப்புரை இயக்கத்தை நடத்துவது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கே.எஸ்.அழகிரி, "ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியதன் அடிப்படையில், அரசியலமைப்பை பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்போம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளோம்.

ராகுல்காந்தியின் நடைபயணத்தின் தொடர்ச்சியாக அந்த பணிகள் தமிழகத்திலும் தொடர வேண்டும் என்ற அடிப்படையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க ஒப்புதல் அளிக்காத கவர்னரைக் கண்டித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கோவை வந்த பாஜக தலைவர் நட்டா தமிழுக்கு பாஜக அரசு நிறைய நிதி உதவி செய்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் சமஸ்கிருதத்திற்குதான் பல மடங்கு நிதி கொடுக்கப்பட்டுள்ளது. நாட்டை சிதைக்க வேண்டும் என்று நினைக்கும் பா.ஜ.க.வின் சதியை காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் ஒருபோதும் அனுமதிக்காது. ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கியது போல ஒப்பந்த ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும்" என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஷ்ணு பிரசாத், விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story