பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: தென்மாவட்ட ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து பயணம்


பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை: தென்மாவட்ட ரெயில்களில் பயணிகள் முண்டியடித்து பயணம்
x

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரெயில்களில் செல்லும் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது.

சென்னை,

பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரெயில்களில் செல்லும் பயணிகள் கூட்டம் நேற்று அலைமோதியது. ரெயில்கள் மற்றும் பஸ்களில் முன்பதிவும் களைகட்டியது. குறிப்பாக ரெயில்கள் பல நாட்களுக்கும் முன்பாகவே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. குறிப்பாக மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, ராமநாதபுரம் போன்ற தென்மாவட்டங்கள் நோக்கி இயக்கப்படும் ரெயில்களில் காத்திருப்பு பட்டியல் டிக்கெட்டுகளே 200-ஐ தாண்டி சென்றுவிட்டது. ஆனாலும் தட்கல் என்ற கதவு திறக்கும் என்ற நம்பிக்கையில் ரெயிலில் டிக்கெட்டுகள் போடப்பட்டு தான் வருகின்றன.

இந்தநிலையில் சென்னையில் இருந்து நேற்று வெளியூர் செல்ல பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். குறிப்பாக எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஒவ்வொரு ரெயிலும் கூட்ட நெரிசலில் புறப்பட்டு சென்றது. அந்தளவு பயணிகள் முண்டியடித்து பயணித்தனர்.

ரெயில்களில் முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள் மட்டுமே ஓரளவு நிம்மதியாக செல்ல முடிந்தது. மற்றபடி பயணிகள் அனைவரும் டிக்கெட் கிடைக்குமோ, டிக்கெட் கிடைத்தாலும் இடம் கிடைக்குமோ என்ற பீதியிலேயே ரெயில் நிலையங்களில் சுற்றி திரிந்தனர். பணிமனையில் இருந்து வந்த ரெயில்கள் நடைமேடைக்கு வந்து நிற்கும் முன்பாகவே ரெயில் பெட்டிகளில் ஏறி பயணிகள் இடம்பிடிக்க தொடங்கினர்.

சிலர் ஜன்னல் வழியாக துண்டுகளை போட்டும் இடம்பிடித்தனர். இன்னும் கொடுமை என்னவென்றால், ஜன்னல் வழியாக உள்ளே குதித்தும் இடம்பிடித்து பயணித்து சென்றதை பார்க்க முடிந்தது. அந்தளவு பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இன்றும், நாளையும் ரெயில் நிலையங்கள் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story