காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
x

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

காஞ்சிபுரம்

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் இதற்கான டோக்கன் வழங்கும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கியது.

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகிக்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.நாள் ஒன்றுக்கு 200 நபர்களுக்கு டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கிய பணி வருகிற 8-ந்தேதி வரை அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும்.

ரேஷன்கடை ஊழியர்களால் வழங்கப்படும் டோக்கன்களில் பொருட்களின் விவரம், வழங்கப்படும் தேதி மற்றும் கால நேரம் போன்றவை குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது. பொதுமக்கள் பொருட்களை பெற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கடைகளில் நேற்று காலை 8 மணி முதல் ரேஷன் கடை ஊழியர்கள் தத்தம் பகுதிகளில் டோக்கன் வினியோகம் செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். காஞ்சீபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரேஷன்கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதன்மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 665 ரேஷன் கடைகளில் 3 லட்சத்து 93 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்கள் இதன்மூலம் பயன்பெறுவார்கள் என காஞ்சீபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.


Next Story