கருணாநிதியின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


கருணாநிதியின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச்சொல்ல வேண்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

நூற்றாண்டு விழா கொண்டாடும் வேளையில் கருணாநிதியின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஆலோசனைக் கூட்டம்

தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மறைந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வருங்கால தலைமுறையினர் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையில் கொண்டாடுவது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழாக்குழு உறுப்பினர்கள், தி.மு.க. அணி செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறன், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பன்முக ஆற்றல்

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

80 ஆண்டு கால பொதுவாழ்வு, ½ நூற்றாண்டு காலம் தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பு, 5 முறை முதல்-அமைச்சர், 13 முறை தேர்தல் களம் கண்டு அனைத்திலும் வெற்றி, ஒரு முறை சட்டமேலவை உறுப்பினர், நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த சிற்பி, இந்திய அரசியலில் நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் வழிகாட்டிய மூத்த தலைவர், பல பிரதமர்களையும், ஜனாதிபதிகளையும் தீர்மானித்தவர், இலக்கியவாதி, கவிஞர், நாடக ஆசிரியர், திரைக்கதை - வசனகர்த்தா, பத்திரிகையாளர் என பன்முக ஆற்றல் கொண்டவர் கருணாநிதி.

150 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளை தனது 80 ஆண்டு கால பொதுவாழ்வில் ஓய்வின்றி உழைத்து நிறைவேற்றிய கலைஞரின் நூற்றாண்டை தி.மு.க. சார்பிலும், அவரது வழியில் நடக்கும் நமது திராவிட மாடல் அரசின் சார்பிலும் கொண்டாடி மகிழ்ந்து வருகிறோம்.

இளைய தலைமுறையிடம்...

சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டம் முதல் குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை வரை தமிழ்நாடெங்கும் பண்பாட்டு அடையாளங்களை உருவாக்கியவர் கலைஞர். மினி பஸ், மெட்ரோ ரெயில், டைடல் பார்க், உழவர் சந்தை, மகளிர் சுயஉதவிக்குழுக்கள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர்.

இந்தியாவுக்கே முன்னோடியாக அவர் கொண்டுவந்த பல்வேறு திட்டங்களைதான், மத்திய அரசுகள் நடைமுறைப் படுத்தின. இப்போதும் நடைமுறைப்படுத்துகின்றன. இப்படிப்பட்ட தலைவரின் வரலாற்றை மறைக்க, திரித்து எழுதும் கூட்டத்திடம் இருந்து, உண்மை வரலாற்றை நாம் காப்பாற்றிட வேண்டும் என்றால், கலைஞரின் உழைப்பை, போராட்டத்தை, சாதனைகளை இளைய தலைமுறையிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

எல்லோர் மனதிலும்...

எல்லா இடத்திலும் எல்லோர் மனதிலும் கலைஞரின் பன்முக ஆற்றலை, சாதனைகளை, அதனால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பெற்ற நன்மைகளை கொண்டு சேர்க்க வேண்டியது நம்முடைய கடமை மட்டுமல்ல, கலைஞருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடும் வேளையில், தி.மு.க.வின் 75-வது ஆண்டு விழாவையும் கொண்டாட இருக்கிறோம்.

எனவே செப்டம்பர் 17-க்குப் பிறகு, இந்த நிகழ்ச்சிகளில் பவள விழாவையும் சேர்த்தே கொண்டாடுங்கள். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் முழுமையாக வென்று, 2024 ஜூன் 3-ந் தேதி, நூற்றாண்டு நாயகர் கலைஞருக்கு அவர் பிறந்தநாளில் நாம் நன்றி காணிக்கை செலுத்துவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story