மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு


மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு
x

கோப்புப்படம் 

ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 2.67 கோடி மின் நுகர் வோர்களின் ஆதாரை இணைக்கும் பணி நவம்பர் 15-ந் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் பொது மக்கள் இணைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை.

பின்னர் துறை சார்பாக விளக்கப்பட்டதை தொடர்ந்து ஆதாரை இணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 31-ந் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. இதற்காக 2,811 பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து கால அவகாசம் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

பிரிவு அலுவலகங்களில் மட்டுமின்றி ஒவ்வொரு பகுதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகின்றனர். நேற்று வரை 2 கோடியே 11 லட்சம் பேரின் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைக்காதவர்களின் வீடுகளுக்கு சென்று மின் ஊழியர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மின் வாரியம் வழங்கிய அவகாசம் முடிய 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்னும் 50 லட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டியுள்ளது. அதனால் மேலும் அவகாசம் கொடுப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மின் வாரிய உயர் அதிகரிகள் கூறியதாவது:-

ஆதார் இணைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இன்னும் சிலர் இணைக்காமல் இருப்பதால் மேலும் சில நாட்கள் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு உள்ளது. இதற்கான அறிவிப்பை அமைச்சர் 30-ந் தேதி வெளியிடுகிறார். மின் இணைப்புடன் ஆதார் இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாது என்று யாரும் கூறவில்லை.

மின் கட்டணம் செலுத்தும்போது அவர்களின் ஆதார் எண் கேட்டு பதிவு செய்யப்படும். எனவே இணைக்காத மின் நுகர்வோர்கள் விரைவில் இணைத்து மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story