'கட்சியை விட்டு வெளியேறு' என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டரால் பரபரப்பு


கட்சியை விட்டு வெளியேறு என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 March 2023 1:45 AM IST (Updated: 11 March 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

‘கட்சியை விட்டு வெளியேறு’ என எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டரால் நிலக்கோட்டை, வத்தலக்குண்டுவில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் போஸ்டர்கள் ஒட்டியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவது தொடர்கதையாக இருக்கிறது.

இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரே மாதிரியான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், "அ.தி.மு.க.வை 8 முறை தோல்வியடைய செய்த எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு. சமத்துவ பேரியக்கத்தை சமுதாய கட்சியாக மாற்றிய எடப்பாடியே கட்சியை விட்டு வெளியேறு. நிலக்கோட்டை தெற்கு ஒன்றியம்" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதே போஸ்டர் வத்தலக்குண்டு நகர் பகுதியிலும் ஒட்டப்பட்டுள்ளன.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒட்டப்பட்ட இந்த போஸ்டர், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related Tags :
Next Story