விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு
விவசாய தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
பொன்னமராவதி ஒன்றியம், முள்ளிப்பட்டி ஊராட்சியில் வசிக்கும் ஏழை மக்களை வறுமைக் கோட்டு பட்டியலில் முறையாக சேர்க்க வேண்டும், முள்ளிப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் மோசடியாக வெளியூரில் வசிக்கின்றவர்களுக்கு வேலை பார்ப்பதாக ஊதியம் வழங்குகின்ற ஊராட்சி மன்றத்தை கண்டித்தும், முள்ளிப்பட்டி அழகர் பெருமாள் கோவில் முன்பு பயன்படாமல் இருக்கும் அடி பம்பை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கடந்த வாரம் மேலத்தானியத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பொன்னமராவதி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் பிரகாஷ் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கண்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. கூட்டத்தில் பொன்னமராவதி வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாகரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பக்ருதீன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் நல்லதம்பி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.