திருவாரூர் பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம்


கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவாரூர் பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்

திருவாரூர்

கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருவாரூர் பகுதியில் அகல்விளக்கு தயாரிக்கும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழைக்கால நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கார்த்திகை தீபத்திருநாள்

தீபம் என்றால் நினைவுக்கு வருவது அகல் விளக்குகள் தான். எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு பல்வேறு வளர்ச்சி அடைந்தாலும் களி மண்ணினால் ஆன அகல் விளக்குகளுக்கு என்றுமே தனி சிறப்பு உண்டு. கோவில்களில் அகல் தீபம் ஏற்றி வழிபட்டால் நமது பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அந்த அளவிற்கு நமது வாழ்க்கையில் அகல் விளக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.

தீப திருநாளான கார்த்திகை பண்டிகையில் அகல்விளக்கு முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருநாள் அடுத்த மாதம் (டிசம்பர்) 10-ந் தேதி கொண்டாடப்படுகிறது.

அகல்விளக்கு தயாரிக்கும் பணி

இதனையொட்டி திருவாரூர் அருகே திருக்காரவாசல் பகுதியில் அகல் விளக்குகள் தயாரிப்பு பணியில் 3 மண்பாண்ட தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். . இதற்காக ஆற்றுபடுகை மற்றும் வயல்களில் இருந்து எடுக்கும் களிமண்ணுடன், வண்டல் மணலை சேர்த்து உற வைக்கின்றனர். பின்னர் பக்குவம் அடைந்த களி மண்ணை கொண்டு பல்வேறு அழகிய வடிவங்களில் அகல்விளக்குகளை தயாரித்து வருகின்றனர்.

தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்

இதுகுறித்து திருக்காரவாசல் மண்பாண்ட தொழிலாளர் தியாகராஜன் கூறியதாவது:-வயல்களில் இருந்து களி மண்எடுத்து வந்து மணலுடன் சேர்த்து பக்குவமான நிலையில் அகல்விளக்குகள் தயார் செய்கிறோம். ஒரு நாளைக்கு 500 விளக்குகள் தயாரிப்போம்.

இந்த விளக்குகள் வெயிலில் காய வைக்கப்பட்டு, தரை கால்வாய் மூலம் எரிக்கப்பட்டு அகல் விளக்குகள் விற்பனைக்கு தயாராகிறது. இதற்காக ஒரு மாதம் முழுமையாக விளக்கு தயாரிக்கும் பணியில் ஈடுபட வேண்டியுள்ளது. இந்த ஆண்டு 10 ஆயிரம் விளக்குகள் தாயாரித்து விற்பனை செய்திடும் நோக்கத்தில் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

உற்பத்தி பாதிப்பு

இப்பகுதியில் 3 குடும்பங்கள் இந்த தொழிலை பரம்பரையாக செய்து வருகிறோம். அகல் விளக்கு மட்டுமின்றி அடுப்பு, பானை போன்றவைகளையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இந்த தொழில் கைவண்ணம், கலை வண்ணமும் கொண்டது என்பதால் தொழிலாளர்களை கொண்டு செய்து விட முடியாது.

மழை காலங்களில் மண் பாண்ட உற்பத்தி பாதிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டு சற்று மழை விட்டு விட்டு பெய்வதால் அகல் விளக்கு உள்பட மண்ட பாண்ட உற்பத்தி பெரிதாக பாதிப்பு இல்லை.

மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்

அச்சு விளக்குகள் வருகை அதிகரித்து வருவதால் களிமண் அகல் விளக்குகள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மழை கால நிவாரணம் வழங்க வேண்டும். எளிய வங்கி கடன் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். இலவச மின்சாரம் வழங்க வேண்டும். குறிப்பாக மண் எடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. எனவே வருவாய்துறையினர் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மண் எடுப்பதற்கு உரிய வழிகாட்டுதலுடன் அனுமதி வழங்கி மண் பாண்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story