ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - எதிர்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு


ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் - எதிர்கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு
x

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 22 எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கொல்கத்தா,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் வருகிற ஜூலை 24-ந் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் தேசிய கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. ஜனாதிபதி தேர்தலில் மாநில கட்சிகளின் பங்கு அதிக அளவில் தேவை என்பதால், மாநில கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. அதே சமயம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர், தென் மாநிலங்களை ஒன்றிணைத்து சரத் பவாரை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, 22 எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதன்படி டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 22 எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக வரும் ஜூன் 15-ந் தேதி டெல்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மாநிலத் தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும் இதில் விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story