பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க புகைப்பட கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து ரசித்தார்


பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்க புகைப்பட கண்காட்சி - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து ரசித்தார்
x

தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, பார்த்து ரசித்தார். கண்காட்சி வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள லலித்கலா அகாடமியில், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படுகிற 'காலத்தால் கரையாத காட்சிகள்' என்ற புகைப்பட கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதில் இருந்த புகைப்படங்களை பார்த்து ரசித்தார். அப்போது, 'தினத்தந்தி' பத்திரிகையில் வெளியான தனது திருமண புகைப்படத்தை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தார். அதே போன்று, 'தினத்தந்தி' பத்திரிகையில் வெளியான எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் பங்கேற்ற தற்போதைய தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் திருமண புகைப்படத்தை பார்த்தும் வியப்படைந்தார்.

அதைத் தொடர்ந்து பொதுமக்களை பார்த்து தலை வணங்கி கும்பிடும் போக்குவரத்து போலீஸ் ஒருவரின் புகைப்படத்தை பார்த்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இவர் எதற்காக இவ்வாறு கும்பிடுகிறார் என்று கேட்டார். அதற்கு, அருகில் இருந்த நிர்வாகிகள் கொரோனா காலத்தில், போக்குவரத்து போலீஸ் ஒருவர் வெளியில் வரும் மக்களிடம் தலைவணங்கி கும்பிட்டு, தயவு செய்து வெளியே வராதீர்கள் என்று கேட்டுக்கொண்ட காட்சி என்று எடுத்துரைத்தனர்.

அதே போன்று, அண்ணா முதல்-அமைச்சராக இருந்த காலத்தில், 'தினத்தந்தி' நிறுவனர் சி.பா.ஆதித்தனார், சபாநாயகராக அமர்ந்து இருப்பதையும், கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோரும் சட்டசபையில் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தையும் ரசித்து பார்த்தார். அதைத் தொடர்ந்து, சுதந்திர தின விழாவில் கோட்டையில் முதல்-அமைச்சர் தான் தேசிய கொடியேற்ற வேண்டும் என்று கருணாநிதி போராடி உரிமை பெற்று முதல் முறையாக 1975-ம் ஆண்டு சுதந்திர தினவிழாவில், கோட்டையில் கருணாநிதி தேசிய கொடியேற்றிவிட்டு வரும் புகைப்படத்தையும் பார்த்து ரசித்தார்.

பெரியார், காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் இறுதி ஊர்வல படங்களையும், ராஜீவ்காந்தி படுகொலை படத்தையும் பார்வையிட்டார். பின்னர், 'தினத்தந்தி' பத்திரிகையில் வெளியான கருணாநிதி 'கோல்ப்' விளையாடும் புகைப்படத்தையும் பார்வையிட்டு நன்கு ரசித்தார்.

இவ்வாறு புகைப்பட கண்காட்சியில் இடம்பெற்ற படங்களை பார்வையிட்டுவிட்டு விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு புத்தகத்தை வெளியிட இந்து குழுமத்தின் இயக்குனர் என்.ராம் பெற்றுக்கொண்டார்.

பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இந்த நாள் ஒரு சிறப்பான நாள். பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பிறகு 1969-ம் ஆண்டு பிப்ரவரி 10-ந் தேதி தான் கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற நாள். அந்த நாளில் இந்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்படுவது பொருத்தமாக அமைந்திருக்கிறது. காரணம் கருணாநிதிக்கும், பத்திரிகைக்கும் என்ன தொடர்பு என்பதைப் பற்றி நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. பலமுறை அவரே சொல்லியிருக்கிறார், என்னுடைய மூத்த பிள்ளை யார் என்று கேட்டீர்களேயானால் 'முரசொலி' தான் என்று பத்திரிகையை குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி.

செய்திகளை படித்து அறிந்து கொள்வதைவிட, புகைப்படத்தை பார்த்தாலே பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். பேனாவிற்கு எப்படி சக்தி இருக்கிறதோ அதுமாதிரி புகைப்படத்திற்கும் சக்தி இருக்கிறது. பேனாவிற்கும், புகைப்படத்திற்கும் பல தொடர்புகள் உண்டு, பல சக்திகள் உண்டு. அந்த வகையில் ஒரு சக்தி வாய்ந்த நிலையிலே தான் அந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கிறபோது அது உயிரோட்டமாகவே இருக்கிறது.

புகைப்படம் என்பது எல்லோராலும் சுலபமாக எடுத்துவிட முடியாது. அதற்கென்று பயிற்சியைப் பெற்று, அந்த உணர்வோடு எடுக்கக்கூடிய நிலையில் இருந்தால் தான் அதை படமாக்க முடியும். அந்த நிலையில் இன்றைக்கு இந்த கண்காட்சியில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை எல்லாம் நான் பார்த்தேன். உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ. எழிலன், நக்கீரன் கோபால், வேலம்மாள் கல்வி குழும தாளாளர் வேல்மோகன், தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் ஜோதி ராமலிங்கம், பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த புகைப்பட கண்காட்சி வருகிற 15-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. கண்காட்சியை பார்வையிடுவதற்கு அனுமதி இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story