வருமுன் காப்போம் மருத்துவ முகாம்


வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 25 Sep 2023 6:45 PM GMT (Updated: 25 Sep 2023 6:46 PM GMT)

கொள்ளிடம் அருகே தைக்காலில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. இதில் 1558 பேர் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை பெற்றனர்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே தைக்காலில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. இதில் 1558 பேர் மருத்துவ உதவி மற்றும் சிகிச்சை பெற்றனர்.

மருத்துவ முகாம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவின் பேரிலும், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அஜித்பிரபுகுமார் பரிந்துரையின் பேரிலும் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழக முதல்-அமைச்சரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

முகாமுக்கு கொள்ளிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை தாங்கினார். கொள்ளிடம் ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ், துணைத் தலைவர் பானுசேகர்,முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் செல்ல சேதுரவிக்குமார், அரசு டாக்டர் சுஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

1558 பேருக்கு மருத்துவ உதவி

முகாமில் பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், சித்த மருத்துவம், கண் மருத்துவம், ரத்த பரிசோதனைகள், ரத்த அழுத்தம், பெண்களுக்கான கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டு இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. சித்த மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்துகளும் வழங்கப்பட்டன.

முகாமில் 1558 பேர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனர். ஒன்றிய குழு உறுப்பினர் பரக்கத்நிஷா,ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவப்பிரகாசம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமாலுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஷாஜகான் நன்றி கூறினார்.


Next Story