கோவிலில் சிலைகளை இடமாற்றிய பூசாரி பணிநீக்கம்- மதுரை ஐகோர்ட்டில் தகவல்


கோவிலில் சிலைகளை இடமாற்றிய பூசாரி பணிநீக்கம்- மதுரை ஐகோர்ட்டில் தகவல்
x

பழமையான சிவன் கோவிலில் சிலைகளை வெவ்வேறு இடங்களில் மாற்றி வைத்ததற்காக கோவில் பூசாரி பணி நீக்கம் செய்யப்பட்டார் என மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரை


பழமையான சிவன் கோவிலில் சிலைகளை வெவ்வேறு இடங்களில் மாற்றி வைத்ததற்காக கோவில் பூசாரி பணி நீக்கம் செய்யப்பட்டார் என மதுரை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சிலைகள் திருடப்பட்டதாக வழக்கு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தாலுகா ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த அருள்மொழி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டு பழமையான சொக்கலிங்கம், மீனாம்பிகை கோவில் உள்ளது. இக்கோவிலில் பிரதான தெய்வமாக சிவனும், மற்ற தெய்வங்களாக ராகு, கேது, நந்தி உள்ளிட்ட சாமி சிலைகள் இருந்தன. இதே கிராமத்தை சேர்ந்த சரவணன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த கோவில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் கோவிலின் புனிதத்தை பாழ்படுத்தும் நோக்கத்தில் சிவலிங்கம், நந்தி சிலைகளை ஏற்கனவே இருந்த இடத்திலிருந்து மாற்றி, வேறு இடத்தில் நிறுவியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ராகு, கேது சிலைகளையும் திருடி விட்டார்.

பாண்டியர் காலத்தில் கோவில் சிலைகளின் அடியில் வைரம், தங்கம் உள்ளிட்டவைகளை வைப்பது வழக்கம். அவற்றை தோண்டி எடுப்பதற்காக சிலைகளை இடமாற்றம் செய்துள்ளார். எனவே திருடப்பட்ட சாமி சிலைகளை மீட்பதுடன், ஏற்கனவே இருந்த இடத்தில் சிவலிங்கம், நந்தி சிலைகளை மீண்டும் வைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இடமாற்றம் செய்த பூசாரி

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியாகவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலையத்துறை சார்பில் அரசு வக்கீல் சுப்புராஜ் பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில், மனுதாரர் தெரிவிக்கும் கோவிலில் இருக்கும் எந்த சிலைகளும் திருடப்படவில்லை. அங்குள்ள பூசாரி, சிலைகளை வெவ்வேறு இடத்தில் மாற்றி வைத்துள்ளார்.

இதனால் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. எனவே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளும் அங்கு வந்து சோதனை செய்து, சிலைகள் மாயமாகவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகம விதிகளின்படி சிலைகள் அந்தந்த இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன என கூறப்பட்டு இருந்தது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அறநிலையத்துறையின் பதில் மனு மீதான கருத்துக்களை அடுத்த விசாரணையின்போது மனுதாரர் தெரிவிக்கலாம் எனக்கூறி, ஜூலை 10-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story