ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிடக்கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டார தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கலாநிதி, மாவட்ட பொருளாளர் சுதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் ரஹீம் கலந்து கொண்டு தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வி தரத்தை பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஆன்லைன் தேர்வு முறைகளை கைவிட வேண்டும். காலை உணவு திட்டத்தை நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்களுக்கும் விரிவு படுத்த வேண்டும். காலை உணவு திட்ட பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவித்து அந்த பணிகளை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் சாந்தகுமார், வட்டார செயலாளர் செந்தில்குமார், வட்டார துணை தலைவர் கலியமூர்த்தி மற்றும் சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.