தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தில் ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மற்றும் பணிகளை ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்து ஆசிரியர்களை அவமதிப்பதை கண்டித்து நேற்று கரூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு கரூர் வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு கரூர் வட்டார தலைவர் மதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கண்ணன், பொருளாளர் கண்ணதாசன் உள்பட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்த பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி குளித்தலை வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் குளித்தலை வட்டார கிளையின் தலைவர் பழனிவேலு தலைமை தாங்கினார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் பிரதிநிதியும், வட்டார செயலாளருமான மணிகண்டன் விளக்க உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள், நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.