காங்கிரசுடன் கூட்டணி இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்; இயக்குனர் கவுதமன் பேட்டி


காங்கிரசுடன் கூட்டணி இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்; இயக்குனர் கவுதமன் பேட்டி
x

காங்கிரசுடன் கூட்டணி இல்லை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று இயக்குனர் கவுதமன் கூறினார்.

அரியலூர்

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் கிராமத்தை சேர்ந்த அனிதா, கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்பு படிக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக குழுமூரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக திரைப்பட இயக்குனர் கவுதமன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தற்போது செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாததால், கடந்த மாதம் 17-ந் தேதி இயக்குனர் கவுதமனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஏக்னஸ் ஜெபகிருபா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று செந்துறை கோர்ட்டில் கவுதமன் ஆஜரானார்.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், நீட் தேர்வை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க.வினர் மீதுள்ள அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு, எங்களை போன்றவர்கள் மீதான வழக்குகள் மட்டும் விசாரணையில் உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. எந்த காலத்திலும் கூட்டணி வைத்துக்கொள்ளாது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதன் மூலம், அவர் ஒரு மிகப்பெரிய தலைவராக உருவெடுத்துள்ளார்.

அவருக்கு கொடுத்துள்ள புரட்சி தமிழர் பட்டம் நிலைக்க வேண்டும் என்றால், அவர் வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டு வைக்கக்கூடாது. அதேபோல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், தமிழீழ இனப்படுகொலை மற்றும் காவிரியில் தண்ணீர் திறந்து விடாமல் தமிழக மக்களை பாதிக்கச் செய்யும் காங்கிரஸ் கட்சியுடன் எக்காலத்திலும் கூட்டணி இல்லை என்று அறிவிக்க வேண்டும், என்றார்.


Next Story