முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்தார்

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவுக்கு வருமாறு மோடிக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாகவே அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு பாதிப்படையும் முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. மாவட்டங்கள்தோறும் சுற்றுப்பயணம் சென்று ஆய்வு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என தொடர் மக்கள் பணியாற்றி வந்த மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12-ந்தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
உடல் சோர்வு இருந்ததால், பரிசோதனை செய்தபோது பாதிப்பு தெரியவந்தது. இதையடுத்து மு.க.ஸ்டாலின், ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார். இதனை மு.க.ஸ்டாலினே தனது டுவிட்டர் பதிவு மூலம் தெரிவித்து இருந்தார். வீட்டு தனிமையில் இருந்த மு.க.ஸ்டாலின், நேற்று முன்தினம் சிகிச்சைக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அலுவல் பணி
காவேரி ஆஸ்பத்திரியில் மு.க.ஸ்டாலினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர், தொடர்ந்து அவருடைய உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோதிலும், மக்கள் நலப்பணிகளில் எந்த காரணம் கொண்டும் தொய்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்.
இதற்காக தனது அன்றாட அலுவல் பணிகளை சிகிச்சையில் இருந்தவாறே அவர் கவனித்து வருகிறார். இதற்கிடையே, மு.க.ஸ்டாலினுக்கு சிகிச்சை அளித்து வரும் காது, மூக்கு மற்றும் தொண்டை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் நேற்று காவேரி ஆஸ்பத்திரிக்கு வந்தார். மு.க.ஸ்டாலினுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் குழுவினரின் சிகிச்சை முறைகள் குறித்து அவர் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
மு.க.ஸ்டாலினை மேலும் சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மோடி நலம் விசாரித்தார்
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
உடல்நலம் குறித்து விசாரித்த மோடிக்கு, மு.க.ஸ்டாலின் நன்றி கூறினார். மேலும், தான் நன்கு குணமடைந்து வருவதாக மோடியிடம் அவர் தெரிவித்தார்.
மோடிக்கு அழைப்பு
சென்னையில் வருகிற 28-ந்தேதி தொடங்க உள்ள உலக செஸ் விளையாட்டு போட்டிக்கு அழைப்பு விடுக்க நேரில் வருவதாக இருந்ததை குறிப்பிட்டு, தான் தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதன் காரணமாக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு ஆகியோரை அனுப்பி வைப்பதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று மோடிக்கு, மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
சோனியாகாந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நேற்று மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும் மு.க.ஸ்டாலின் விரைந்து நலம் பெறுவதற்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.