பிரதமர் நரேந்திர மோடி 26-ந் தேதி சென்னை வருகை


பிரதமர் நரேந்திர மோடி 26-ந் தேதி சென்னை வருகை
x

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26-ந் தேதி சென்னை வருகிறார். நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் ரூ.12,400 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை,

சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 26-ந் தேதி வருகை தருகிறார். இதுதொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது. அதன்படி பிரதமர் மோடி 26-ந் தேதி பிற்பகல் 3.55 மணிக்கு ஐதராபாத்தில் உள்ள பெகும்பெட் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை 'ஐ.ஏ.எப். பி.பி.ஜே.' விமானத்தில் புறப்படுகிறார். சென்னை விமான நிலையத்தில் மாலை 5.10 மணிக்கு வந்து இறங்குகிறார்.

அங்கு அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரவேற்கின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு 18 கி.மீ. தூரம் பயணித்து நிகழ்ச்சி நடைபெறவுள்ள பெரியமேடு ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 5.45 மணிக்கு வருகிறார். இந்த பயணத்தின் இடையில் அவருக்கு பா.ஜ.க.வினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

முதல்-அமைச்சர் மனு

ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு இரவு 7 மணி வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அங்கிருந்து இரவு 7.05 மணிக்கு புறப்பட்டு 7.35 மணிக்கு சென்னை விமான நிலையத்தை சென்றடைகிறார். அங்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் அங்கிருந்து 7.40 மணிக்கு இந்திய விமானப்படை 'ஐ.ஏ.எப். பி.பி.ஜே.' விமானத்தில் புறப்பட்டு டெல்லிக்கு இரவு 10.25 மணிக்கு செல்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி செல்வதற்கு மற்றொரு திட்டமும் வகுக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்க அதிக நேரம் இல்லாத நிலை ஏற்பட்டு, காற்று வீச்சும் குறைவாக இருந்தால், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாறு இறங்குதளத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு அவர் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை வரும் பிரதமரிடம் தமிழகம் சார்ந்த பல்வேறு திட்டங்கள், கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி மனு அளிப்பார் என்றும் கூறப்படுகிறது.

என்னென்ன திட்டங்கள்?

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் திட்டங்களின் விவரம் வருமாறு:-

நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், ரூ.12,413 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். பெங்களூரு-சென்னை இடையிலான 4 வழி விரைவுச்சாலை திட்டத்தின் 3-ம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் வழியாக செல்லும் இந்த சாலையின் 3-ம் கட்ட பணிகள், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தின் ராமாபுரம் கிராமத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரையில் 106 கி.மீ. தூரத்துக்கு ரூ.3,472 கோடியில் அமைக்கப்படுகிறது.

சென்னையில் அமைய உள்ள பல்முனை சரக்கு போக்குவரத்து பூங்காவுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். சென்னை தவிர கோவை உள்பட 35 பூங்காக்கள் நாடு முழுவதும் அரசு-தனியார் பங்களிப்பில் அமைக்கப்படுகிறது. சென்னை மப்பேட்டில் 158 ஏக்கர் நிலம் இதற்காக கண்டறியப்பட்டுள்ளது. ரூ.1,200 கோடி மதிப்புள்ள இந்த திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது.

தர்மபுரியில் இருந்து ஒசூருக்கு ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும் சாலையில் 2-வது மற்றும் 3-வது தொகுப்பு திட்டப்பணிகள், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

தாம்பரம்-செங்கல்பட்டு ரெயில் பாதை

சென்னை பெரும்பாக்கத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.116.37 கோடியில் 12 கட்டிடத் தொகுப்புகளில் 1,152 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிட திட்டத்தை நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு வீட்டுக்கான ஒதுக்கீட்டு ஆணையை பிரதமர் நரேந்திர மோடி வழங்க இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு ரெயில்வே திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். தாம்பரம்-செங்கல்பட்டு 3-வது பாதை, மதுரை-தேனி அகல ரெயில் பாதை ஆகிய திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

அந்த வகையில், சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 4 திட்டங்கள், ரெயில்வே துறை திட்டங்கள், நகர்ப்புற வீட்டு வசதித்துறை திட்டங்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி விழா பேருரையாற்றுகிறார்.


Next Story