மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு


மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு
x
தினத்தந்தி 20 Dec 2023 9:22 AM GMT (Updated: 20 Dec 2023 9:54 AM GMT)

மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தென் மாவட்டங்களில் அதி கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிகனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்று இரவு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்து, இம்மாதத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள இரண்டு பெரிய வெள்ள பாதிப்புகளுக்குத் தேவைப்படும் நிதியினை தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிடக் கோரிக்கை மனுவை அளித்தார். இதனைத் தொடர்ந்து இன்று (20.12.2023) காலை சென்னை திரும்பிய முதல்-அமைச்சர், சென்னை, எழிலகத்திலுள்ள, மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு சென்று அங்கு தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்தும், மீட்புப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், சேத விவரங்களையும் முதல்-அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைத்தார். முதல்-அமைச்சர், தூத்துக்குடி மாவட்டத்தில் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுடன் வீடியோ கால் மூலமாக முகாம்களில் அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், வழங்கப்படும் உணவு மற்றும் மருத்துவ உதவிகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடனும், வருவாய் நிருவாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராஜேஷ் லக்கானி, ஆகியோருடன் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், மருத்துவ உதவிகளையும் குறைவின்றி செய்து கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். அத்துடன் சென்றடைய முடியாத நிலையில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் அவர்களை மீட்க என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்பணிகளை விரைவுப்படுத்தவும் கேட்டுக் கொண்டார்.

தண்ணீர் சூழ்ந்துள்ள கிராமங்களில் சிக்கியுள்ள மக்களுக்கு உணவு வழங்கல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும், மாவட்ட ஆட்சியர்களை முதல்-அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரையும், பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

முன்னதாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோரை முதல்-அமைச்சர் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிலையை கேட்டறிந்து உரிய அறிவுரைகளை வழங்கினார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story