பழமையான துலாக்கல் கண்டெடுப்பு


பழமையான துலாக்கல் கண்டெடுப்பு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தை சேர்ந்த 750 ஆண்டுகள் பழமையான துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றிலிருந்து நீர் இறைக்க பயன்படும் ஒருவகை நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படும். மக்கள் பயன்பாட்டுக்கு தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு போகும் காலங்களில் கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம். இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்து தந்துள்ளார்கள். இது பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் இருந்துள்ளது. கோவில் அருகில் வெட்டப்பட்டுள்ளவை திருமஞ்சனக் கிணறுகள் என்றும், வழிப்பாட்டு தலங்களில் உள்ளவை பொது குடிநீர் கிணறுகள் என்றும் அறிய முடிகிறது.

கல் தூண்

இந்தநிலையில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, நூர்சாகிபுரம் சிவகுமார் ஆகியோர் பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோவில் முன்பு உள்ள ஒரு துலாக்கல்லில் கல்வெட்டு இருப்பதை கள ஆய்வின் போது கண்டறிந்தனர். அவற்றை படியெடுத்து படித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து ராஜகுரு, சிவகுமார் ஆகியோர் கூறியதாவது:-

பாட்டக்குளம் சல்லிப்பட்டி ஸ்ரீபாலாண்டி அய்யனார் கோவில் முன்பு 7 அடி உயரமும், 1½ அடி அகலமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது. இதன் மேற்பகுதி குறுகலாக அமைந்துள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இந்த கோவில் பாட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றில் இருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல் ஆகும்.

பாண்டியர் காலம்

அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்துக் கொடுத்துள்ளார். பாண்டியர் காலத்தில் இவர் இப்பகுதியின் ஆட்சியாளராக இருந்திருக்கலாம். இங்கு துலாக்கல் மட்டுமே உள்ளது. கிணறு மூடப்பட்டிருக்கலாம்.

இந்த ஊருக்கு மிக அருகே உள்ள விழுப்பனூரிலும் இதேபோன்ற ஒரு துலாக்கல் உள்ளது. இதில் உள்ள சுந்தரபாண்டியன் கல்வெட்டில், மலைமண்டலத்தைச் சேர்ந்த ஒருவன் கிணறு, துலாக்கல், படிக்கட்டு, தொட்டி அமைத்த தகவல் உள்ளது. விருதுநகரில் இருந்து ஆமத்தூர், மங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் வெள்ளூர், விழுப்பனூர், மானகச்சேரி, மாறனேரி, அர்ச்சுனாபுரம் போன்ற ஊர்களில் பாண்டியர் காலத்தில் கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இது போன்ற கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன.

கி.பி.13-ம் நூற்றாண்டின் இறுதியில் இப்பகுதிகளில் தண்ணீர் பஞ்சம் நிலவியுள்ளதை அறியமுடிகிறது. இது பிற்கால பாண்டியர்களின் கி.பி.13-14-ம் நூற்றாண்டை சேர்ந்தது என கருதலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story