போலீஸ்நிலைய மாடியில் இருந்து குதித்த விசாரணை கைதி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


போலீஸ்நிலைய மாடியில் இருந்து குதித்த விசாரணை கைதி: ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x

வத்தலக்குண்டுவில் போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க, போலீஸ்நிலைய மாடியில் இருந்து விசாரணை கைதி குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு, ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல்,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் விஜயபாண்டியன் (வயது 32). நேற்றுமுன்தினம் இரவு இவர், தனது ஊருக்கு செல்வதற்கு திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பஸ்நிலையத்துக்கு வந்தார்.

அப்போது பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த 3 வாலிபர்கள், விஜயபாண்டியனை மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயபாண்டியன், பஸ்நிலையம் அருகே உள்ள வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார்.

அதன்பேரில், பஸ்நிலையத்துக்கு விஜயபாண்டியனுடன் போலீசார் விரைந்து சென்றனர். அங்கு விஜயபாண்டியன் அடையாளம் காட்டிய 3 பேரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் அவர்களிடம் நடத்திய சோதனையில், விஜயபாண்டியனிடம் இருந்து பறித்த செல்போன் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், தேனி மாவட்டம் தேவதானப்பட்டியை சேர்ந்த கரண்குமார் (25), பாலமுருகன் (25), பிரதீவ் (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்தின் மாடியில் போக்குவரத்து போலீஸ்நிலையம் உள்ளது. அந்தப்பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து 3 பேரிடமும் நேற்று காலை போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது கரண்குமார், கழிவறைக்கு செல்லவேண்டும் என்று போலீசாரிடம் கூறினார். இதனையடுத்து அவரை அருகே உள்ள கழிவறைக்குச் செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். அதன்பேரில், அறையில் இருந்து கரண்குமார் வெளியே சென்றார்.

தப்பிக்க முயற்சி

இந்தநிலையில் போலீசாருக்கு தெரியாமல், போலீஸ்நிலையத்தின் 2-வது மாடிக்கு கரண்குமார் சென்றார். போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து செல்வதற்காக, மாடியில் இருந்து திடீரென கரண்குமார் கீழே குதித்தார். அவர் விழுந்த சத்தத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஓடிச் சென்று போலீசார் பார்த்தபோது, தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் கரண்குமார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கு கரண்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோர் வத்தலக்குண்டு போலீஸ்நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணை கைதி ஒருவர், போலீஸ் நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து தப்பித்துச் செல்ல முயன்ற சம்பவம் வத்தலக்குண்டுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story