தேனி: கார் மீது மோதிய தனியார் பஸ் - டிரைவரை தாக்கி பஸ்சை தன்வீட்டுக்கு ஓட்டிச்சென்ற ஆயுதப்படை காவலர்...!


தேனி: கார் மீது மோதிய தனியார் பஸ் - டிரைவரை தாக்கி பஸ்சை தன்வீட்டுக்கு ஓட்டிச்சென்ற ஆயுதப்படை காவலர்...!
x
தினத்தந்தி 1 Aug 2022 4:28 PM IST (Updated: 1 Aug 2022 4:31 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே கார் மீது மோதிய பஸ்சை பயணிகளை இறக்கிவிட்டு தன்வீட்டுக்கு ஓட்டிச் சென்ற ஆயுதப்படை காவலரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் டி.பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த கதிரேசன். இவர் தேனி ஆயுதப்படை காவலராக வேலை செய்து வருகிறார். இவர் தனது காரில் தேனி நோக்கி இன்று சென்ற கொண்டிருந்தார்.

அப்போது ஆண்டிப்பட்டி டி.சுப்புலாபுரம அருகே வந்த ஒரு ஒரு தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக ஆயுதப்படை காவலர் கதிரேசன் வந்த காரின் பின்பக்கத்தில் மோதியது. இந்த விபத்தில் காரின் பின்பகுதி சேதமடைந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த காவலர் கதிரேசன், தனது ஊர்காரர்கள் சிலருடன் சேர்ந்து தனியார் பஸ் டிரைவர் அழகுராஜா என்பவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

பின்னர், பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு, பஸ்சை தனது ஊரான டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு எடுத்து சென்றுவிட்டார்.

இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆண்டிப்பட்டி போலீசார் டி.பொம்மிநாயக்கன்பட்டிக்கு விரைந்து சென்று தனியார் பஸ்சை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

ஆனால் பஸ்சில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா, டிவி, டேப் ரிக்கார்டர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தனியார் பஸ் டிரைவர் அழகுராஜா ஆண்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ஆயுதப்படை காவலர் கதிரேசனை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story