தனியார் கல்லூரி பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல் - 13 மாணவிகள் படுகாயம்


தனியார் கல்லூரி பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல் - 13 மாணவிகள் படுகாயம்
x

தானிப்பாடி அருகே தனியார் கல்லூரி பஸ், லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாணவ-மாணவிகள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள ராவந்தவாடி பகுதியில் தனியார் கலை அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது.

இந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளை கல்லூரி பஸ்சில் ஏற்றிக்கொண்டு இன்று காலை வழக்கம்போல தண்டராம்பட்டில் உள்ள கல்லூரி நோக்கி வந்து கொண்டிருந்தது.

இந்த பஸ் தானிப்பாடி சந்தைமேடு மலைப்பகுதியில் வரும்போது எதிரே எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 13 மாணவ-மாணவியர் படுகாயமடைந்தனர். இதேபோன்று பஸ் டிரைவர் குபேந்திரன், லாரி டிரைவர் ரவி ஆகியோரும் படுகாயமடைந்தனர்.

இவர்களை அப்பகுதியினர் மீட்டு தானிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதில் பலத்த காயமடைந்த ஜெயலட்சுமி (19), அன்னலட்சுமி (20), இந்து (20), நிஷா (19) ஆகிய 4 மாணவிகள் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

மேலும், விபத்து குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story